2026 நவம்பர் 10 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் ஊடகக் குழுவின் முன்னாள் தலைவரால் வெளியிடப்பட்ட சில கருத்துக்கள், மறைமுகக் குறிப்புகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஆரம்பத்திலேயே, மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட பொய்யான, ஆதாரமற்ற, தவறாக வழிநடத்தும் மற்றும் தீய நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளை, குறிப்பாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீர, வீராங்கனைகளுக்கான விமானப் பயணச்சீட்டுகளைக் கொள்வனவு செய்வதில் இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் பிரதான அலுவலகப் பொறுப்பாளர்கள் மோசடி மற்றும்/அல்லது நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர் என மறைமுகமாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு திட்டவட்டமாகவும் நிபந்தனையின்றியும் நிராகரித்து மறுக்கின்றது.
இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவிற்குள் வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சியை மீண்டும் உறுதிப்படுத்துவதில் அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் செயற்படும் பல பிரதான அலுவலகப் பொறுப்பாளர்களின் நன்மதிப்பிற்கும் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் மற்றும்/அல்லது மறைமுக நோக்கத்துடன் இக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை தெளிவாகப் புலனாகின்றது.
நியாயமான காரணங்களின்றி இவ்வாறான ஆதாரமற்ற மற்றும்/அல்லது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும்போது, ஒலிம்பிக் இயக்கத்திற்குள் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குறித்த நிறுவனத்தின் (அதாவது இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின்) நம்பகத்தன்மையில் பாரதூரமான பின்விளைவுகள் மற்றும்/அல்லது தாக்கங்கள் ஏற்படும் என்பதை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு கரிசனையுடன் அவதானிக்கின்றது.
எனவே, தேசிய விளையாட்டுச் சம்மேளனங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் போன்ற தனது பங்குதாரர்களுக்கு, தனது அலுவல்கள் நிறுவப்பட்ட நிர்வாகம், நிதி முகாமைத்துவம் மற்றும் பொறுப்புக்கூறல் கட்டமைப்புகளுக்குள் மிகவும் நம்பகமான மற்றும் வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கில் உண்மை நிலையைத் தெளிவுபடுத்துவது அத்தியாவசியமானது என இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு கருதுகின்றது.
மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட விடயம், நிறுவனத்தின் உரிய நிர்வாக மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்புகளால் மிகவும் கவனமாக ஆராயப்பட்டு மீளாய்வு செய்யப்பட்டுள்ளது. நிறைவேற்றுச் சபை, கொள்முதல் குழு மற்றும் நிதிக் குழு ஆகியன உரிய கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் செயன்முறைகளைச் சுயாதீனமாக மீளாய்வு செய்துள்ளனடன், பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள விடயத்தில் மோசடி, நிதி முறைகேடு அல்லது தவறான நடத்தை இடம்பெற்றமைக்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்பதை நிபந்தனையன்றி உறுதிப்படுத்தியுள்ளன.
கேள்விக்குரிய விமானப் பயணச்சீட்டுகளைக் கொள்வனவு செய்வதற்குத் தீர்மானிக்கும் போது, 7 உத்தேச விநியோகஸ்தர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மிகக் குறைந்த விலைமனுக்களைக் கருத்திற்கொண்டதுடன், இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவிற்கு வழங்கப்பட்ட முக்கிய கடன் வசதிகள், உரிய நேரத்திலான பயணம், தங்குமிட வசதிகள் மற்றும் மிகக் குறைந்த இடைத்தங்கல் நேரங்களைக் (lay-over times) கொண்ட மிகச் சிறந்த விமான சேவைப் பங்காளிகள் ஆகியவற்றையும் முகாமைத்துவம் கருத்திற்கொண்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.
தெளிவாக வரையறுக்கப்பட்ட பொறுப்புகள், உள்ளகக் கட்டுப்பாடுகள் மற்றும் நிறைவேற்றுச் சபைக்குக் கண்காணிப்பு, பரிசீலனை மற்றும் பரிந்துரைகளை வழங்கும் சுயாதீனக் குழுக்களைக் கொண்ட நிறுவப்பட்ட நிர்வாக முறையின் அடிப்படையிலேயே இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு எந்நேரமும் இயங்குகின்றது என்பதை வலியுறுத்த விரும்புகின்றது. நிறைவேற்றுச் சபையின் தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்ச்சியான மீளாய்வுக்கு உட்படுத்தப்படுவதுடன், ஒலிம்பிக் சாசனத்தின் கோட்பாடுகள் மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நிறுவன ரீதியான நேர்மையை வலுப்படுத்துவதற்கு நிறுவனம் அர்ப்பணிப்புடன் உள்ளது.
மேற்கூறப்பட்ட சூழ்நிலையில், இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் குறிப்பிட்ட சில பிரதான அலுவலகப் பொறுப்பாளர்களின் நேர்மை மற்றும் நாணயம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வெளிப்படையான முயற்சியாக, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட ஆதாரமற்ற மற்றும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு திட்டவட்டமாக நிராகரித்து மறுக்கின்றது.
தனது பொறுப்புகள், நிறுவன ரீதியான சுயாதீனம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கை விளையாட்டு வீரர்களின் நலன்களுக்காகத் தான் உறுதியுடன் அர்ப்பணிப்புடன் இருப்பதாக இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு இதன்மூலம் மீண்டும் உறுதிப்படுத்துகின்றது. தனது ஆணையை நிறைவேற்றுவது, அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் இலங்கை விளையாட்டுத் துறையை முன்னோக்கிக் கொண்டு செல்வது ஆகியவற்றிலேயே அதன் கவனம் தொடர்ந்தும் இருக்கும்.
தனிப்பட்ட நலன்களை விட எமது விளையாட்டு வீரர்களின் நலன்களும் இலங்கை விளையாட்டுத் துறையின் எதிர்காலமுமே எப்போதும் முதன்மை பெறும்.
அறிக்கை – இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு
