மலையக தமிழ் மக்களின் காணி உரிமையை உறுதி செய்து விட்டு, பெருந்தோட்ட கம்பனிகளுடன் புதிய குத்தகை ஒப்பந்தம் செய்ய வேண்டும்; இது தான் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைபாடு.
கம்பனிகளிடம் தோட்டங்கள் இருக்க வேண்டும். அப்போது தான் காணிகள் பாதுகாப்பாக இருக்கும். என்றாவது ஒரு நாளாவது எமது மக்களுக்கு தர காணிகள் எஞ்சி இருக்கும்.
எனக்கு அரசிடம், பயமும், கடப்பாடும் இல்லை. ஏனெனில் எனக்கு எதிராக எந்த “ஃபைலும்” இல்லை
என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இன்று (18-11-26) பாராளுமன்றத்தில் மனோ கணேசன் சிங்கள மொழியில் ஆற்றிய உரையில் மேலும் கூறியதாவது;
சம்பள நிர்ணய சபையில், தீர்மானித்து, வர்த்தமானி பிரகடனத்துடன் 200/= சம்பள உயர்வை அறிவிக்க வேண்டும்;
கடந்த முறை நல்லெண்ண நோக்கில் 2ம் நிலை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தோம். இம்முறை இல்லை. நீங்கள் சம்பளத்தை கூட்டி, கம்பனிகளுக்கு நிறை சுமையை கூட்டவும் இடம் கொடுத்து விட்டீர்கள்.
மலையக மக்களுக்கு போதுமான நிதி ஒதுக்காமல், பெருந்தோட்ட தொழில் துறைக்கு ஒதுக்கிய ரூ13, 000 மில்லியன் நிதியை மலையக மக்களுக்கு ஒதுக்கினோம் என பொய் சொல்கிறீர்கள்.
ஆட்சிக்கு வருவதற்கு பொய் சொல்வதை கூட புரிந்து கொள்ளலாம். ஆனால், ஆட்சியை நடத்த பொய் சொல்வதை ஏற்க முடியாது. அதிலும், அப்பாவி மலையக மக்களை ஏமாற்றுவோர் தலையில் இடிதான் விழும்.
பெருந்தோட்ட கம்பனிகளுடன் புதிய குத்தகை ஒப்பந்தம் செய்ய ஜனாதிபதி குழு நியமித்து உள்ளார். தகுந்த யோசனைகள் தரலாம். அதற்கு உங்களை நாற்காலி, மேசை, எடுத்து கொண்டு டியூசன் படிக்க வர சொல்லவில்லை. உட்கார்ந்து கலந்து உரையாடி தீர்மானிக்கலாம்.
காணி உரிமை என்றால் என்ன? 20-பேர்ச் வதிவிட காணி தோட்டத்தில் வேலை செய்தாலும், இல்லா விட்டாலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்க பட வேண்டும். திருமணம் ஆன ஒவ்வொரு ஜோடியும் ஒரு குடும்பம் தான். இது தான் முழுமையான காணி உரிமை.
2022ல் எமது கூட்டணி சாசனத்தில் சொன்னோம். அதையே தான் 2023ல் நீங்கள் உங்கள் “ஹட்டன் பிரகடனம்” என்பதில் சொன்னீர்கள். பயிரிட
படாத தரிசு காணிகள் தோட்ட இளைஞருக்கு பிரித்து வழங்குவதாக சொன்னீர்கள். இன்று ஒரு அங்குலம் கூட தரவில்லை. ஆனால் தனியார் கம்பனிகளுக்கு பிரித்து கொடுக்கிறீர்கள். இது நியாயமான? என கேட்கிறேன்.
