அனுரவின் ‘பொய் பிரசாரப் பயணம்’ – சஜித்

0
164

ஜனாதிபதி நாட்டுக்காக பணியாற்றுவதற்குப் பதிலாக, தனது பதவியேற்ற இரண்டாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தொடர் கூட்டங்களை நடத்தி வருவதாகவும், அதற்கு தான் ‘பொய் பிரசாரப் பயணம்’ எனப் பெயரிடுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

“இப்போது பாருங்கள், அவர்கள் நாட்டுக்காக எதையும் செய்வதற்குப் பதிலாக, இரண்டு ஆண்டுகளை கொண்டாடுவதற்காக தொடர் கூட்டங்களை நடத்துகிறார்கள். இந்தக் கூட்டத் தொடரின் பிரதான கருப்பொருள் ‘இரண்டு ஆண்டுகள் – நாட்டுக்கு நல்வாழ்வு’ என்பதாகும்.

நீங்கள் உங்கள் கூட்டத் தொடரை தொடர்ந்து நடத்துங்கள். ஆனால் நாங்கள் அதற்கு ‘பொய் பிரசாரப் பயணம்’ என்று பெயரிடுகிறோம். இந்தப் பொய் பிரசாரப் பயணத்தின் ஒரு கூட்டம் பேருவளையிலும் நடைபெறுகிறது.

களுத்துறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மீன்பிடி அமைச்சுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை மீனவ சமூகத்தினர் தங்களுடைய துறைமுகங்களுக்கு வர முடியாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்குக் காரணம், மீனவர்கள் தங்களுடைய தொழிலை முடித்துக்கொண்டு மாலை 5.30 முதல் 7.30 மணிக்குள் துறைமுகத்திற்கு வருவது ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு பிரச்சினையாக இருக்குமாம். அதனால், அந்த இரண்டு மணி நேரமும் மீனவர்களை கடலில் தங்க வைக்குமாறு பொலிஸார் உத்தரவு பிறப்பிக்கின்றனர்.

இதுதானா ‘சிஸ்டம் சேஞ்ச்’? நீங்கள் உங்கள் பொய் பிரசாரப் பயணங்களை தொடர்ந்து நடத்துங்கள். ஆனால் உண்மையாகவே மக்களின் நாடித்துடிப்பை அறிந்துகொள்ள வேண்டுமென்றால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்.”

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தக் கருத்துக்களை சமகி ஜன பலவேகயவின் ரத்தோட்ட மகளிர் சக்தி அமைப்பை நிறுவுவதற்காக நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here