பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்சவுக்கு எதிராக இன்று (20) நீதிமன்றத்தில் பொலிஸார் தகவல் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோதக் கூட்டம் மற்றும் அரசுப் பணிக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், வீரவன்சவுக்கு எதிராக நீதிமன்றத்தில் விடயங்கள் முன்வைக்கப்பட உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
விமல் உள்ளிட்ட குழுவொன்று ரணவிரு நினைவுச்சின்னத்திற்கு மலரஞ்சலி செலுத்தச் சென்றபோது, பொலிஸார் அவர்களை நினைவுச்சின்னம் அருகே செல்ல அனுமதிக்காததால் பதற்றநிலை ஏற்பட்டதுடன் கடும் வாக்குவாதமும் இடம்பெற்றது.
அதன் போது, பொலிஸ் அதிகாரிகளை தள்ளிக்கொண்டு முன்னேற முயன்ற விமல் தரையில் விழுந்த சம்பவமும் இடம்பெற்றது.
