நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
14 வருடங்களுக்குப் பின்னர் இன்று (15) நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்திலேயே அந்தச் சங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதில் சுமார் 3,500 சட்டத்தரணிகள் கலந்துகொண்டதுடன், ஒரு பகுதியினர் Zoom தொழில்நுட்பம் ஊடாக இக்கூட்டத்தில் இணைந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பல விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, தற்போது நாட்டில் நிலவும் படுகொலை கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான யோசனைகளை முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடூரக் குற்றத்துடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸார் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைப்புகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூகமயப்படுத்துவது அல்லது அவற்றை உண்மை எனச் சித்தரிப்பது தொடர்பில் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது சங்கம் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகத் தலைவர் மேலும் தெரிவித்தார்.
